காவடி பழனியாண்டவர் கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா
தேரோட்டம்
சேலம் காவடி பழனியாண்டவர் ஆசிரமம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் வரும் பங்குனி உத்திர திருவிழாவின் போது முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. காலை 5 மணிக்கு சுப்ரபாதம், கோமாதா பூஜையுடன் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து மூலவருக்கு தங்க கவசம் சாத்துப்படி செய்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் 9 மணிக்கு காவடிகள் புறப்பாடு மற்றும் அருள்வாக்கு சொல்லுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அதைத்தொடர்ந்து மாலையில் 1,008 பால்குட ஊர்வலமும், 5.30 மணிக்கு தேர்த்திருவிழா நடந்தது. இதையொட்டி காவடி பழனியாண்டவர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.