கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

 பக்தர்கள் நேர்த்திக்கடன்

விழுப்புரம் அருகே பிள்ளையார்குப்பம் முருகன் கோவிலில் நடந்த பங்குனி உத்திர திருவிழாவில் கொதிக்கும் எண்ணெய்யில் கைகளை விட்டு வடைகளை சுட்டு எடுத்து முருகனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழுப்புரத்தை அடுத்த பில்லூர் அருகே பிள்ளையார்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி, தெய்வானை சமேத முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதுபோல் 40-ம் ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு வள்ளி, தெய் வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந் தது.

தொடர்ந்து, 7 மணிக்கு காவடி அபிஷேகமும், 8 மணிக்கு காவடி ஊர்வலமும், பக்தர்களுக்கு மிளகாய் பொடி கரைசல் அபி ஷேகமும் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக அலகு குத்திக் கொண்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் கொதிக்கும் எண்ணெய்யில் கைகளை விட்டு வடைகளை சுட்டு எடுத்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதை பார்த்ததும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மிகுந்த நெகிழ்ச்சிய டைந்தனர். நேர்த்திக்கடன் செலுத்த சுட்ட வடைகளை பக்தர்கள் தலா ரூ.50 முதல் ரூ.100 வரை கொடுத்து வாங்கிச்சென்றனர். பின்னர் மாலை 5 மணிக்கு இடும்பன் பூஜையும், இரவு 7 மணிக்கு சாமி வீதி உலாவும், நாடக குழுவினரின் தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story