பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!
பங்குனி உத்திர திருவிழா
தமிழகத்தின் "தென்பழனி" கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படும். இந்தாண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடந்தது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இதனை தொடர்ந்து அரோஹரா கோஷங்கள் முழங்க கொடியேற்றி மகா தீபாராதனையும் நடந்தது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் சிகரமான தேரோட்டம் வரும் 23ம் தேதி சனிக்கிழமை நடக்கிறது. 25ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
Next Story