பங்குனி உற்சவம் : திருமேனிநாதர் பூத வாகனத்தில் திருவீதியுலா
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம் கடந்த மார்ச் 15-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருச்சுழி அருள்மிகு ஸ்ரீ திருமேனிநாதர் திருகோயில் 14-பாண்டிய திருத்தலங்களில் 10வது புண்ணிய ஸ்தலமாக திருச்சுழி உள்ளது.
இங்கு பங்குனி உற்சவத்தை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 3-ஆம் நாள் திருநாளான இன்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் ஆலயத்தில் இருந்து கிளம்பி தேரடி கருப்பசாமி கோயில் வழியாக சென்று நகரின் முக்கிய வீதிகளான தீயணைப்பு நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம் வழியாக சென்று வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதனையடுத்து வரும் 22-ம் தேதி திருக்கல்யாணமும், 23-ம் தேதி மஹா தேரோட்டமும் நடைபெற உள்ளது. மேலும் திருவீதி உலா வந்த ஸ்ரீதிருமேனிநாதர் மற்றும் துணைமாலை அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.