போரூரில் திறந்து கிடக்கும் மழைநீர் வடிகாலால் பீதி
திறந்த நிலையில் உள்ள கால்வாய்
போரூர் - குன்றத்துார் சாலையில் திறந்து கிடக்கும் மழைநீர் வடிகாலை மூடுவதுடன், சட்டவிரோதமாக வழக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளையும் துண்டிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. போரூர் சந்திப்பில் இருந்து குன்றத்துார் செல்லும் சாலை,
நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ளது. இச்சாலை வழியாக தினமும், பல ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. இதனால், இச்சாலையில் கடும் நெரிசல் நிலவி வருகிறது. நடைபாதை ஆக்கிரமிப்பால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இச்சாலையில் உள்ள மழைநீர் வடிகால் மேல் மூடி உடைந்து,
திறந்த நிலையில் உள்ளது. இதனால், பாதசாரிகள் வடிகாலில் தவறி விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன், இந்த மழைநீர் வடிகாலில், சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், மழைநீர் செல்ல வேண்டிய கால்வாயில், கழிவுநீர் செல்கிறது.
எனவே, மழைநீர் வடிகால் மேல் மூடி சீர் செய்து, வடிகாலை மூட வேண்டும். அத்துடன் மழைநீர் வடிகாலில் சட்டவிரோதமாக விடப்படும் கழிவுநீர் இணைப்புகளையும் துண்டிக்க வேண்டும் என்ற, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.