பாபநாசம் : பருத்தி ரூ.6939க்கு விற்பனை
பருத்தி ஏலம்
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் தஞ்சாவூர் விற்பனைக் குழுவிற்குட்பட்ட பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடப்பு ஆண்டு பருத்தி மறைமுக ஏலம் தொடங்கப்பட்டது. இம்மறைமுக ஏலத்தில் பாபநாசம் மற்றும் அதன் சுற்று பகுதிகளான மதகரம்,சத்தியமங்கலம்,வலங்கைமான், கோபுராஜபுரம், அய்யம்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து 215 விவசாயிகள் தங்களது பருத்தியினை விற்பனனக்கு எடுத்து வந்திருந்தனர்.
இதில் தஞ்சாவூர், நாகப்பட்டினம் கும்பகோணம், விழுப்புரம், பண்ருட்டி, செம்பனார் கோவில் பகுதிகளைச் சார்ந்த 7 வணிகர்கள் கலந்து கொண்டனர். இம்மறைமுக ஏலம் நடைபெறுவதை வேளாண்மை அலுவலர் தாரா மறைமுக ஏல பணிகளை பார்வையிட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் அதிக விலை நிர்ணயிக்குமாறு பருத்தி கொள்முதல் வணிகர்களை கேட்டுக் கொண்டார். இம்மறைமுக ஏலத்தில் 30.100 மெ. டன் அளவு பருத்தி வரத்து வரப்பெற்றது.
அதிகப்பட்சமாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 6939 என்ற வீதத்திலும் குறைந்தபட்சமாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 5049 மற்றும் சராசரியாக ரூ. 5889 என்ற வீதத்திலும் விற்பனை செய்யப்பட்டது. பருத்தியின் மொத்த மதிப்பு ரூபாய் 17 இலட்சம் ஆகும்.
இம்மறைமுக ஏலத்தில் தஞ்சாவூர் விற்பனை குழு செயலாளர் மா. சரசு தலைமையிலும் விற்பனனக்கூட கண்காணிப்பாளர் இரா.தாட்சாயினி முன்னிலையில் நடைபெற்றது. மேலும் விளம்பரம் மற்றும் பிரச்சார கண்காணிப்பாளர் பி. சித்தார்த்தன், விற்பனை அலுவலர்கள் கலந்து கொண்டனர் மேலும் எள் ,உளுந்து,பச்சைப்பயறு,கொப்பரை,மற்றும் பாரம்பரிய நெல் வகைகளும் ஏல முறையில் விற்பனை செய்து தரப்படுகிறது இதன் மூலமாக விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.