பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம் 

வகுப்பறை கட்டிடம் கேட்டு, பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பழைய பேராவணியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (மேற்கு) அமைந்துள்ளது. இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 65க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் ஒருவர் உதவி ஆசிரியர் ஒருவர் பள்ளியில் பணியாற்றி வருகின்றனர்.

இப்பள்ளியில் ஏற்கனவே ஐந்து வகுப்பறை கொண்ட கான்கிரீட் கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடம் பழுதடைந்து அடிக்கடி சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததால் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. அதன் பிறகு தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு தகர கொட்டகையில், ஐந்து வகுப்புகளும் இயங்கி வருகிறது. இதனால் ஒரு வகுப்புக்கு பாடம் நடத்தும் போது மற்ற வகுப்புகளுக்கு பாடம் நடத்த முடியாமல் ஆசிரியர்களும், பாடங்களை புரிந்து கொள்ள முடியாமல் மாணவர்கள் தவித்து வந்தனர்.

இந்நிலையில் பேராவூரணி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தகரக் கொட்டகையில், பக்கவாட்டு தடுப்புச் சுவர் இல்லாத காரணத்தால், மழைநீர் வகுப்புகளுக்குள் புகுந்ததால், மாணவ, மாணவிகளின் புத்தகங்கள் நனைந்தும், மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிள்ளைகளை அருகில் உள்ள கோவிலில் தங்க வைத்தனர். குழந்தைகள் சீருடையுடன் கோவிலிலேயே தங்கி உள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், "பள்ளிக்கு நிலையான கான்கிரீட் கட்டிடம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், ஆட்சியர், எம்எல்ஏ, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கல்வித் துறை அலுவலர்கள் என பலரிடமும் மனு அளித்து இதுவரையும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உடனடியாக கட்டித் தருவதாக வாக்குறுதி அளிக்கும் அதிகாரிகள், அதனை செயல்படுத்த மறுக்கின்றனர். பாதுகாப்பான கட்டிடம் இல்லை என்பதால் 12க்கும் மேற்பட்ட குழந்தைகளை, பெற்றோர்கள் வேறு பள்ளியில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.

தகரக் கொட்டகையாக இருப்பதால் பக்கவாட்டுச் சுவர் இல்லாததால், மழைச்சாரல் வகுப்புகளுக்குள் வருவதால் மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. எனவே, வகுப்பறை கட்டடம் கட்டாவிட்டால் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்" என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதையடுத்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, செல்வேந்திரன், காவல்துறை ஆய்வாளர் காவேரி சங்கர், உதவி ஆய்வாளர் ராம்குமார் மற்றும் கல்வித் துறை அலுவலர்கள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், விரைவில் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காணலாம் என தெரிவித்தனர்.

இதை ஏற்க மறுத்து பெற்றோர்கள் தொடர்ந்து தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை உணவு திட்டத்திற்காக சமைக்கப்பட்ட உணவுகள் குழந்தைகள் உண்ணாமல் அப்படியே இருந்தது. இதனையடுத்து, காலை 11:30 மணியளவில் வெளியூரில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், அலைபேசி மூலம் பெற்றோர்களிடம் பேசினார். விரைவில் பள்ளிக்கு கட்டடம் கட்டித் தரப்படும் என உறுதி அளித்தார். இதனை ஏற்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags

Next Story