ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை
ராமநாதபுரத்தில் மாணவனின் கையை உடைத்த தனியார் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள தெற்கு நரிப்பையூர் கிராமத்தில் அமீர் என்பவர் இல்ம் மெட்ரிக்குலேசன் ஸ்கூல் என்ற பெயரில் தனியார் பள்ளி நடத்தி வருகிறார். இங்கு மதினா நகரை சேர்ந்த இக்பால் என்பவரின் மகன் ஷகில் (13) என்ற மாணவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், அந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியரான ஷேக்மீரான் என்பவர் மாணவனிடம் ஏன் பாடத்தை சரியாக படிக்கவில்லை என கேட்டதாகவும், அதற்கு எனது புத்தகம் உங்களிடம் தான் சார் இருக்கிறது. அதனால் தான் படிக்க என பதிலளித்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த ஆசிரியர் மாணவரின் கையை பிடித்து திருகியதில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த மாணவர் பள்ளி நேரம் முடிந்ததும் வீட்டுக்கு வந்து தனது தாயாரிடம் நடந்த விபரத்தை கூறி அழுதுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்று முதலுதவி சிகிச்சைக்கு பின் தூத்துக்குடி கொண்டு செல்லப்பட்டு கைக்கட்டு போடப்பட்டுள்ளது.
பள்ளிக்கு போக முடியாத சூழ்நிலையில் வேதனையுடன் மாணவர் ஷகில் தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதுகுறித்து 1098 என்ற சைல்டு லைன் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், மாணவரின் கையை முறித்த ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாயல்குடி காவல்துறையினரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.