அரசு பள்ளியில் பெற்றோர் தர்ணா
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளியில் எம் பி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டு கடந்த 12ஆம் தேதி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அந்த கட்டிடம் அரசு மேல்நிலைப்பள்ளி 9, 10 வகுப்பு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று காலை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்த புதிய வகுப்பறைகளை தொடக்க பள்ளி மாணவனைகளுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளை தொடர்பு கொள்ள கூறியுள்ளனர்.
இந்த நிலையில் திடீரென்று தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் வகுப்பறையில் இருந்து வெளியே வரவழைக்கப்பட்டு, வெளியில் அமர வைக்கப்பட்டனர். தங்களது குழந்தைகள் வராண்டாவில் அமர வைக்கப்பட்டு இருப்பதை அறிந்த பெற்றோர் குழந்தைகளுடன் தர்ணாவில் ஈடுபட்டனர். இதை அடுத்து மாவட்ட உயர் கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களிடம் இன்று காலையில் (19-ம் தேதி) பேசி முடிவெடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் மாணவர்கள் மீண்டும் வகுப்பறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.