மாலையணிந்து வந்த மாணவர்களை முட்டி போட வைத்ததால், பெற்றோர் தர்ணா
குமாரபாளையம் அரசுப்பள்ளி மாணவர்கள் சிலர், கோவிலுக்கு செல்ல மாலை அணிந்து வந்ததால் தலைமையாசிரியர் முட்டி போட வைத்தார்; பெற்றோர் தர்ணா போராட்டம் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஒரே வளாகத்தில் அரசு தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியன செயல்பட்டு வருகிறது. இதில் 8 மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பலர் சபரிமலை, பழனிமலை யாத்திரை செல்லவேண்டி, விரதமிருந்து மாலை அணிந்து கொண்டு வந்துள்ளனர். இவர்களை பள்ளியின் தலைமையாசிரியர் சுப்ரமணி, வகுப்பறையின் வெளியில் முட்டி போடச்சொல்லி தண்டனை கொடுத்துள்ளார்.
இது குறித்து தகவல் பரவியதும் பா.ஜ.க. மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வக்கீல் தங்கவேல் தலைமையில் நிர்வாகிகள் பலரும், பெற்றோரும் பள்ளியின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து வக்கீல் தங்கவேல் கூறியதாவது: மாலை அணிந்து கோவிலுக்கு செல்வது அவரவர் விருப்பம். மாலை போட்டு விரதமிருத்தல் போன்ற செயல்களால் மாணவர்களிடையே ஒழுக்கம் வளரும். இந்து மத பழக்க வழக்கங்களில் தலையிட தலைமையாசிரியர் மற்றும் இதர ஆசிரியர்களுக்கு அதிகாரம் கிடையாது. இந்து மதத்திற்கு எதிராக செயல்படும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பெற்றோர் சரவணன், ஆனந்தி, சரண்யா கூறியதாவது: இந்த பள்ளியில் சரியாக பாடம் நடத்துவதும் இல்லை. போதுமான ஆசிரியர்களும் இல்லை. எங்கள் பிள்ளைகள் நாளுக்கு நாள் கல்வி தகுதியில் மிகவும் குறைந்து வருகிறார்கள். கழுத்தில் உத்திராட்சம் அணிந்து வந்தால், உன் அப்பனை வேறு பள்ளிக்கூடம் கட்டி, அங்கு போய் விட சொல். இங்கு உத்திராட்சம் எடுக்க வேண்டும். சரியாக படிக்காத மாணவர்களை கூட்டிக்கொண்டு போங்க, என்று வற்புறுத்தி வருகிறார்கள். இங்கு வழங்கப்படும் உணவு தரமானதாக காட்டினால், தூக்கி போட்டு விட்டு சாப்பிடு. இங்கு இதுதான் தரப்படும் என்கின்றனர். வீட்டில் எனது பிள்ளைகள் இருவரும் இந்த பள்ளிக்கு போக மாட்டேன் என்று கூறி, அறையின் உள்ளே போய் தாழிட்டுக் கொண்டனர். மாலை அணிந்து வந்ததால் கேவலமாக பேசுகிறார்கள். மாலை கழட்டி விட்டு வகுப்புக்கு வா, என்று மிரட்டுகிறார்கள். ஆசிரியர் ஒருவர் இதற்காக எங்கள் பிள்ளைகளை கன்னத்தில் பல அடிகள் கொடுத்து, நாளை வரும் போது மாலை இருக்க கூடாது என்று மிரட்டினார். ஆசிரியர்களுக்கு பயந்து எங்கள் பிள்ளைகள் தவறான முடிவுக்கு போனால் யார் என்ன செய்ய முடியும். இது போன்ற அராஜக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தே.மு.தி.க. மாவட்ட பொருளர் மகாலிங்கம் கூறியதாவது: இந்த பள்ளியில் சுகாதாரம் எதுவும் கிடையாது. போதுமான வகுப்பறைகள், போதுமான ஆசிரியர்கள், போதுமான கழிப்பறைகள் கிடையாது. இருக்கும் கழிவறையும் தூய்மையானதாக இருக்காது. சில மாதங்கள் முன்பு இதே பள்ளியில், மாணவர் ஒருவரை வகுப்பறை உள்ளே வைத்து பூட்டி விட்டு சென்றனர். இரவில் எழுந்து அவனது அழுகுரல் கேட்ட அக்கம்பக்கத்தினர், ஆசிரியர் ஒருவருக்கு தகவல் தெரிவித்து, பல மணி நேரம் கழித்து சாவி வரவழைக்கப்பட்டு, மாணவரை வெளியே அழைத்து வந்த சம்பவமும் நடந்துள்ளது. மாணவர்கள் மீது இந்த பள்ளி ஆசிரியர்களுக்கு துளியும் அக்கறை இல்லை. அனைவரையும் இடமாறுதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தலைமையாசிரியர் சுப்பிரமணி கூறியதாவது: மாலை அணிந்து வந்தால், கோவிலுக்கு போனால் படிப்பு பாழாகும். அதனால் மாலையை கழட்ட சொல்லி முட்டி போட சொன்னேன். வேறு எந்த நோக்கமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் நேரில் வந்து, தலைமையாசிரியர் வசம் பேசியபின், அனைவரிடமும் தலைமையாசிரியர் மன்னிப்பு கேட்டார். அதன் பின்பும் தலைமையாசிரியர் இடமாற்றம் செய்யும் வரை எழுந்திருக்க மாட்டேன் என பள்ளி முன்பு தர்ணா போராட்டம் செய்தார். பல மணி நேரத்திற்கு பின், போலீசார் சமாதான வார்த்தை பேசி, தர்ணா போராட்டத்தை கைவிட வைத்தனர். பள்ளியின் முன்பு பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர்.