செங்கல்பட்டு பேருந்து நிறுத்தத்தில் வாகனங்கள் பார்க்கீங்
பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்
செங்கல்பட்டு மாவட்டம்,கூடுவாஞ்சேரி பேருந்து நிலைய வளாகத்தில், இரு சக்கர வாகன கட்டண பார்க்கிங் வசதி உள்ளது. தற்போது, அதிக அளவிலான வாகனங்கள் வருவதால், ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டண பார்க்கிங் இடம் நிரம்பிவிடுகிறது. அதனால், அதன்பின் வரும் இருசக்கர வாகனங்கள், பேருந்து நிலைய வளாகத்திற்குள்,
பேருந்து நிறுத்தம் செய்யும் இடத்தில், அனுமதியின்றி அத்துமீறி நிறுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு, தனியார் ஒப்பந்ததாரர் கட்டணம் வசூல் செய்து வருகிறார். இது, பேருந்து நிலையம் வரும் பயணியருக்கும், பேருந்து ஓட்டுனர்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது.
இது குறித்து, காமராஜபுரம், குபேரன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில், நகராட்சி கமிஷனருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம், கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மாநகர பேருந்து ஓட்டுனர்கள்,
நடத்துனர்களின் ஓய்வறையாக இருந்த இடம், தற்போது டூ - வீலர் கட்டண பார்க்கிங்காக மாற்றப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டது. ஒப்பந்தம் பெற்ற நபர், ஒப்பந்தம் பெற்ற எல்லை வரையறைக்குள் வாகனங்களைநிறுத்தாமல், பேருந்து நிறுத் தத்தில் பயணியருக்கும், பேருந்து ஓட்டுனர்களுக்கும்இடையூறாக வாகனங்களை நிறுத்தி அட்டூழியம் செய்து வருகிறார். எந்த ஒரு நகராட்சி பேருந்து நிலையத்திலும், இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது
இல்லை. எனவே, ஒப்பந்தம் பெறப்பட்ட நபர், அத்துமீறி செயல்படுவதை தடுத்து நிறுத்த, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட நகராட்சி கமிஷனர் தாமோதரன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.