பகுதி நேர வேலை; ஆன்லைன் மோசடி
தஞ்சாவூரை சேர்ந்த பெண்ணிடம் ஆன்லைனில் பகுதி நேர வேலை எனக்கூறி ரூ. 1.22 லட்சம் மோசடி நடந்துள்ளது.
தஞ்சாவூரில் பெண்ணிடம் இணையவழியில் வேலை எனக் கூறி ரூ. 1.22 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூரைச் சேர்ந்த 27 வயது பெண்ணின் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்ஆப்பில் மே மாதம் வந்த தகவலில், பகுதி நேர வேலை என விளம்பரம் இருந்தது. அதனுடன் வந்த லிங்கை அப்பெண் சொடுக்கி, உள்ளே சென்று பார்த்தார். அதில், விடியோக்களை அதிக அளவில் பகிர்ந்தால், தங்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும் எனக் குறிப்பிட்டிருந்தது. இதை நம்பிய அப்பெண் இணையவழியில் இருந்த வங்கிக் கணக்குக்கு ரூ.120 செலுத்தி, வீடியோக்கள் பகிர்ந்ததன் மூலம் ரூ.200 லாபம் கிடைத்தது. இதையடுத்து, ரூ.300 செலுத்திய அப்பெண்ணுக்கு ரூ. 800 லாபம் வந்தது. இதைத்தொடர்ந்து, பல தவணைகளாக ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 676 செலுத்திய அப்பெண்ணுக்கு பணம் திரும்பக் கிடைக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் தஞ்சாவூர் இணையதளக் குற்ற காவல் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story