அரைகுறை கட்டுமான பணி - பொதுமக்கள் சாலை மறியல்

அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் அரைகுறையாக நடைபெற்று கிடப்பில் போடப்பட்டுள்ளதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மதுரை பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே வேலாயுதபுரம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்காக ஏற்கனவே இருந்த கழிவு நீர் கால்வாய் பாலங்கள் உடைக்கப்பட்டு பழைய கழிவுநீர் கால்வாய் அனைத்தும் தோண்டப்பட்டது. ஆனால் கழிவு நீர் கால்வாய் தோண்டப்பட்ட நாளிலிருந்து பணிகள் நடைபெறவில்லை‌. பெயரளவில் கம்பி கட்டும் பணி மட்டும் நடைபெற்றது. வேற எந்த பணியும் நடைபெறவில்லை.

இரண்டு மாதங்களாக பணிகள் நடைபெறவில்லை என்பதால் அப்பகுதியில் இரண்டு வீதிகள் பாதை இல்லாமல் துண்டிக்கப்பட்டது.‌ அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பஜார், மருத்தவமனை, கடை உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்காக நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.‌ மேலும் மதுரை பிரதான சாலையாக இருந்ததால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வேலாயுதபுரம் பகுதியில் மதுரை பிரதான சாலையில் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.‌ மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நகர் காவல் நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளுடன் பேசி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக சமாதானத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் சமாதானத்தை ஏற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த நகராட்சி பொறியாளர் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.‌ அதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story