பள்ளிபாளையத்தில் கட்சிக் கரை துண்டு விற்பனை சரிவு

பள்ளிபாளையத்தில் கட்சிக் கரை துண்டு விற்பனை சரிவு

கட்சி துண்டு விற்பனை சரிவு

பாராளுமன்றத் தேர்தல் நிறைவு பெற்றுள்ளதால் பள்ளிபாளையத்தில் அரசியல் கட்சிகளின் கரைத்துண்டுகள், வேட்டிகள், விற்பனை சரிவை சந்தித்துள்ளது

இந்தியா முழுவதும் பல்வேறு கட்டங்களாக, நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் மாதம் துவக்கம் வரை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை அடுத்து தேர்தல் களம் பரபரப்பான நிலையில், தேசிய,மாநில அரசியல் கட்சியினர் ,இதர கட்சிகளை இணைத்துக் கொண்டு கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வது, பொதுமக்களை சந்தித்து தேர்தல் பரப்பரை மேற்கொள்வது, உள்ளிட்ட பணிகளை செய்து வந்தனர் .

தற்போது ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நாமக்கல்லில் செயல்படும் தனியார் ஜவுளிக்கடைகளில், கரை வேட்டிகள், துண்டுகள்,சால்வைகள், பொன்னாடைகள், விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து நாமக்கல் ஈரோடு சாலையில் ஜவுளிக்கடை வைத்திருக்கும் ரவீந்திரன் என்பவர் கூறும் பொழுது ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் முழுவதும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் மார்ச் மாத துவக்கத்திலேயே அறிவித்திருந்தது.

இதனை அடுத்து அரசியல் கட்சியினர், பொதுமக்களை சந்திப்பதற்கும்,கட்சி தலைமை தலைவர்களை சந்திப்பதற்கும், கட்சிக் கூட்டங்களுக்கு தேர்தல் பரப்புரைகளுக்கு பயன்படுத்துவதற்கும் என அதிகளவு எங்கள் ஜவுளிக்கடைகளிலும், மற்ற மொத்தமாக அரசியல் கட்சிகளின் துண்டுகள், கரைவேட்டிகள் ,விற்பனை செய்யப்படும் தொழில் கூடங்களுக்கும் சென்று மொத்தமாக வாங்கிச் சென்றனர். மேலும் ஒவ்வொரு நாளும் கூட்டணி கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் சேர்ந்தவர்களும் தனித்தனி பிரச்சாரம் மேற்கொள்வதற்காகவும், அரசியல் சார்ந்த தேர்தல் பரப்புரைகள் என பல்வேறு தேவைகளுக்காகவும் தொடர்ந்து எங்களிடம் கட்சி துண்டுகளை வாங்கி வந்தனர்.

ஆனால் ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த பிறகு நிலைமை தலைகீழானது. மேலும் ஒரு மாத காலத்திற்குப் பிறகு வாக்குகள் எண்ணப்படும் நிலையும், இருந்ததால் கட்சி கரைவேட்டி துண்டுகள் விற்பனை அப்போதே கணிசமான அளவில் சரிவை சந்தித்தது. தற்போது தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெற்றி பெற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள், கூட்டணி கட்சியினர், பொதுநல விரும்பிகள் என பல்வேறு தரப்பினர் கடந்த சில தினங்களாக ஒன்று இரண்டு சால்வைகள், பொன்னாடைகள், துண்டுகள் ஆகியவற்றை வாங்கி செல்கின்றனர்.

கிட்டத்தட்ட தேர்தல் கால பரபரப்பு குறைந்து, பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் எங்கள் வியாபாரமும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. இருந்த போதிலும் எதிர்வரும் சில மாதங்களில் ஐயப்பன் கோவில் பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக தயாராவார்கள் என்பதால், அவர்களுக்கு தேவைப்படும் கருப்பு துண்டு, கருப்பு வேட்டி உள்ளிட்ட அடுத்த கட்ட சீசன் விற்பனையை தற்போது நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம் என தெரிவித்தார்.

Tags

Next Story