குமரியில் பராமரிப்பில்லாமல் சேதமடைந்த பார்வதிபுரம் மேம்பாலம்
குமரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 2018-ம் ஆண்டு பார்வதிபுரம், மார்த்தாண்டத்தில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. பாலத்தை கட்டிய கட்டுமான நிறுவனம் 4 ஆண்டுகள் பராமரித்து வந்தனர். அவர்களின் ஒப்பந்த காலம் முடிவடைந்து பாலம் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பாலங்களில் பராமரிப்பு பணிகளோ, ஆய்வோ நடைபெற வில்லை. மேலும், அதிவேகத்தில் ஓவர் லோடுடன் கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு செல்லும் டாரஸ் லாரிகள் செல்வதால் பாலத்தில் சாலைகள் சேதம் அடைந்தன.
இதுபோல், ஓவர்லோடு, அதி வேக டாரஸ் லாரிகள் பாலங்களில் திடீரென பிரேக் போடும்போது, அந்த பகுதியில் அழுத்தம் தாங்கமல், பாலங்கள் பழுது ஏற்பட்டு வருகின்றன. இந்தநிலையில் பார்வதிபுரம் மேம்பாலத்திலும், பல பகுதிகளில் தார்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. சாலை பெயர்ந்து உள்ளதால், விபத்து அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் இந்த மேம்பாலத்தில் பைக் ரேஸ்கள் நடக்கிறது. இதனால் விபத்துக்களும், உயிர் பலிகளும் ஏற்படும் நிலை உள்ளது. பாலத்தின் போதுமான மின் விளக்கு வசதியும் இல்லை. பார்வதிபுரம் மேம்பாலத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இரவு நேரங்களில் பயணிகள் அதிகளவில், பஸ்சுக்காக காத்து நிற்கிறார்கள்.
எனவே இது போன்ற பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பார்வதிபுரம் மேம்பாலத்திலும் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.