பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி, திருச்சிக்கு பயணிகள் ரயிலை இயக்கணும்!
தமிழ்நாடு அரசு, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் பட்டுக்கோட்டை வட்டக்கிளையின் சார்பில் ஓய்வூதியர் தின விழா மற்றும் 75 வயது நிறைந்த ஓய்வூதியர்களுக்கு பாராட்டு விழா பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.
விழாவிற்கு, சங்கத்தின் வட்டத் தலைவர் கண.கல்யாணம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் த.சந்திரமோகன் வரவேற்றார். துணைத்தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி அஞ்சலி தீர்மானம் வாசித்தார் . தீர்மானங்களை முன்மொழிந்து செயலாளர் இரா.அண்ணாதுரை பேசினார். 75 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களைப் பாராட்டி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் வெ.அன்புச்செல்வன் சிறப்புரையாற்றினார்.
நிறைவாக வட்டப் பொருளாளர் சோம.ஆறுமுகம் நன்றி கூறினார். சென்னை - எழும்பூர் - இராமேஸ்வரம் தினசரி இரவு நேர விரைவு ரயிலை இருமுனைகளிலிருந்தும் திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழியாக இயக்க வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து பட்டுக்கோட்டை- காரைக்குடி வழியாக மதுரைக்கும், பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி வழியாக திருச்சிக்கும் தினசரி பயணிகள் ரயிலை இயக்க வேண்டும். பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டிக்கெட் முன்பதிவு மையம் இயங்க நடவடிக்கை வேண்டும். நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள அரியலூர் - தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை மற்றும் மன்னார்குடி - பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதைகளுக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்து இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்" எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.