மதுராந்தகத்தில் ரயிலை மறித்து பயணிகள் போராட்டம்
சென்னை புறநகர் மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் பகுதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மதுராந்தகத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் , பணி நிமித்தமாகவும், கல்லூரி மாணவ மாணவிகளும் ரயிலில் சென்று வருவது வழக்கம். குறிப்பாக விழுப்புரம் பயணிகள் ரயிலில் அதிகளவு பயணிகள் செல்வார்கள். இந்தநிலையில் அவ்வப்பொழுது விழுப்புரம் பயணிகள் ரயில் தாமதமாக வருவதாக பயணிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இன்று காலை 6:40 மணி அளவில் வரவேண்டிய ரயில் தாமதமாக வந்ததால், திடீரென பயணிகள் மதுராந்தக ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் பொழுது , அவ்வழியே சென்ற தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை பயணிகள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இதன் காரணமாக தென் மாவட்டத்திலிருந்து சென்னையை நோக்கிச் சென்ற பல்வேறு எக்ஸ்பிரஸ் தாமதமானது. தேஜஸ் எக்ஸ்பிரஸ் அரை மணி நேரத்திற்கு மேலாக சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு அனுப்பி வைத்தனர். இந்தப் போராட்டம் வந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மதுராந்தகம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரயில்வே ஊழியர்கள், ரயில் நிலையம் மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பயணிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களாக அதிக பனிப்பொழிவு காரணமாக ரயில் தாமதமாக வருவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மதுராந்தகத்திலிருந்து சென்னைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகிறார்கள் இவர்களை கருத்தில் கொண்டு, காலை வேலைகளில் இவ்வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த போராட்டத்தில் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.