நெல்லையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்
நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் தென்னக ரயில்வே கோட்டத்தில் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்தும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் தினமும் கிளம்பி செல்கிறது. தென் மாவட்டத்தின் மைய புள்ளியாக அமைந்துள்ள நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
நாள்தோறும் தட்கல் முன்பதிவு செய்வதற்கு பயணிகள் அதிகாலை முதலே காத்திருந்து முன்பதிவு செய்யும் நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்புவதற்காக பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் நேற்றைய தினம் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது. பலர் முன்பதிவு இருக்கை கிடைக்காமல் அடுத்தடுத்த நாட்களில் புறப்படுவதற்கான திட்டங்களையும் தயார் செய்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தட்கல் முன்பதிவு செய்வதற்கு நெல்லை சந்திப்பு நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு தரகர்கள் இடையூறு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இந்த நிலையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் அதிகாலை முதலே டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு காத்திருந்த பொதுமக்களை தக்கல் முன்பதிவு செய்வதற்கு புரோக்கர்கள் இடையூறு செய்வதாகவும் முன்கூட்டியே இடம் பிடித்து நாங்கள்தான் அமர்ந்திருக்கிறோம் தங்களுக்கு பணம் தர வேண்டும் என கேட்பதாகவும் நெல்லை சந்திப்பு இருப்பு பாதை காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் புரோக்கர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு உடன் அங்கிருந்து சம்பந்தம் இல்லாத நபர்களையும் விரட்டியடித்தனர் காவல்துறை அதிகாரிகள் வருவது அறிந்த புரோக்கர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அங்கிருந்த ஒரு சில புரோக்கர்களையும் அப்பகுதியில் நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்கள் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்ததால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இருப்பு பாதை போலீசாரும் ரயில்வே பாதுகாப்பு கொட்டினரும் முன்பதிவு செய்யும் கவுண்டர் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.