பராமரிப்பின்றி பஸ் நிலைய கழிப்பறை - ஸ்ரீபெரும்புதுாரில் பயணியர் அவதி
பஸ் நிலைய கழிப்பறை
நவீன கட்டண கழிப்பறை மிகவும் மோசமான நிலையிலும், தண்ணீர் குழாய்கள் உடைந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அரசு பேருந்து இயக்கப்படுகின்றன. ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலைய வளாகம் பராமரிப்பின்றி உள்ளது. பேருந்து நிலையத்தில் உள்ள நவீன கட்டண கழிப்பறை மிகவும் மோசமான நிலையிலும், தண்ணீர் குழாய்கள் உடைந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், பேருந்து நிலையம் வரும் பயணியர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், கழிப்பறையை முறையாக பராமரிக்காததால், பேருந்து நிலையம் முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிப்பறையை பயன்படுத்த அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணியர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேபோல, பெண்கள் பாலுட்டும் அறை பூட்டியே கிடக்கிறது. தனியார் அறக்கட்டளை சார்பில் பேருந்து நிலையத்தில் பயணியர் வசதிக்காக அமைக்கப்பட்ட இலவச குடிநீர் சுத்திகரிப்பு குழாய் பராமரிப்பின்றி உள்ளது. ஆக்கிரமிப்பு கடைகளால், பேருந்து நிலையம் உள்ளே வரும் அரசு பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை திருப்ப முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலைய வளாகத்தை பராமரிக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
Next Story