குடிநீர் வரியை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றம்
சிவகங்கையில் குடிநீர் வரியை இரண்டு மடங்காக உயர்த்தி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர் மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன் உட்பட வார்டு கவுன்சிலர்கள் பலர் பங்கேற்று தங்களது பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை விடுத்தனர். கோரிக்கைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக 44வது தீர்மானத்தில், சிவகங்கை நகராட்சி பொதுமக்களுக்கு 2010 ஆண்டு முதல் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் 2.86 எம்.எல்.டி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 2010 ஆம் ஆண்டில் ஒரு கிலோ லிட்டர் ரூபாய் 4.50 வீதம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு செலுத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு ஆண்டிற்கும் 5% உயர்த்தியும் இறுதியாக தற்போது 30.8.2023 முதல் ஒரு கிலோ லிட்டர் குடிநீர் ரூபாய் 16 ஆக உயர்த்தி கேட்பு பட்டியல் வரப் பெற்றுள்ளது. ஆனால் தற்போது வரை பொது மக்களிடம் குடியிருப்புகளுக்கு ரூபாய் 100 வீதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் மின் கட்டணம், குடிநீர் கட்டணம் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் ஆகியவைகள் செலுத்த மிகவும் சிரமமாக உள்ளது. எனவே குடியிருப்புகளுக்கு மாதம் ஒன்றுக்கு ₹ 200 வீதமும் மற்றும் வணிக வளாகங்களுக்கு ரூபாய் 350 வீதமும் உயர்த்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதனை அனைத்து கவுன்சிலர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்