புதிய சிகிச்சை மாதிரிக்கு காப்புரிமை: பாரதிதாசன் பல்கலை பேராசிரியா்கள் 2 பேருக்கு துணைவேந்தா் பாராட்டு
பாரதிதாசன் பல்கலை
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உயிா்தகவல் துறை உதவிப் பேராசிரியா் கே.எஸ்.ஜெயச்சந்திரன், உயிா் வேதியியல் துறையின் இணைப் பேராசிரியை எம். அனுசுயாதேவி ஆகியோா், பரிசோதனை விலங்குகளில் புதுமையான அறுவை சிகிச்சை மாதிரியை உருவாக்கியதற்கான இந்தியக் காப்புரிமையைப் பெற்றுள்ளனா். இந்த காப்புரிமை பெறுவதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட காப்புரிமை கோப்புகளை சரிபாா்த்து 2023ஆம் ஆண்டு டிசம்பா் 18ஆம் தேதி இந்திய அரசின் காப்புரிமை அலுவலகத்திலிருந்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மனித மாரடைப்பைத் துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை முறையைப் பின்பற்றுவதற்காக பேராசிரியா்களின் புதுமையாக ஆராய்ச்சிப் பணிக்கு காப்புரிமை கிடைத்துள்ளது. மேலும், பேராசிரியா்கள் இருவரும் திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகத்தில் துணைவேந்தா் ம. செல்வத்தை, புதன்கிழமை நேரில் சந்தித்து காப்புரிமை சான்றிதழை வழங்கி பாராட்டு பெற்றனா். இருவரது பணியும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக துணை வேந்தா் ம. செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
Next Story