நீலகிரி மாவட்ட சோதனை சாவடிகளில் ரோந்து பணிகள் தீவிரம்

தமிழ்நாடு-கேரளா மாநில எல்லையில் அமைந்திருக்கும் வயநாடு மாவட்டத்தில் சமீப காலமாக தொடர்ந்து மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை கேரளா மாநில தண்டர்போல்ட் சிறப்பு போலீஸ் படைக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

இதில் மாவோயிஸ்ட்கள் தப்பித்து சென்ற நிலையில் ஆயுதங்கள் மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு - கேரளா மாநில எல்லையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சோதனை சாவடிகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள ஓவேலி சோதனை சாவடி ஆகியவற்றை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் நேரில் பார்வையிட்டு, அங்கு பணியில் உள்ள காவலர்களுக்கு அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு பின்னரே நீலகிரி மாவட்ட எல்லை பகுதிகளுக்குள் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் இரண்டாம் நாளாக இன்றும் முதுமலை வனப்பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் முச்சந்திப்பு என்னும் பகுதியில் துப்பாக்கி ஏந்தியபடி வனப்பகுதிகளில் தேடுதல் பணியை மேற்கொண்டனர். தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லைகளை இணைக்கும் 11 சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story