ஒய்வு பெற்ற கூட்டுறவு நூற்பாலை ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கல்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் 146 நபர்களுக்கு ரூ.5 கோடியே 47 இலட்சம் மதிப்பில் பணிக்கொடை தொகைக்கான காசோலைகள் வழங்கும் விழாவிற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமை தாங்கினார்.கைத்தறி மற்றும் துணிநூல் துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் துணிநூல் துறை ஆணையர் டாக்டர்.வள்ளலார் மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் உள்ளிட்ட பலரும் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் காந்தி பேசும்போது தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் துணிநூல் துறையின் முன்னேற்றம் கருதி இத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, ஒன்றிய அரசின் ஜவுளி அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து கோயம்புத்தூரில் தொழில்நுட்ப ஜவுளிக் கருத்தரங்கு 2 நாட்கள் நடத்தப்பட்டது. கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியத்திலிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட நூற்பாலையில் கடந்த 30 வருடமாக நிலுவையில் இருந்த ரூ.4 கோடியே 16 இலட்சம் கடந்த வருடம் வழங்கப்பட்டது. கூட்டுறவு நூற்பாலை அமைக்க 2 சதவிகிதமாக இருந்த மானியத்தை 6 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, ஆறாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தமிழக அரசால் 7.30 கோடி திட்ட மதிப்பீட்டில் 25,520 கதிர்களுடன் துவக்கப்பட்டு வணிக ரீதியான உற்பத்தியை துவக்கி செயல்பட்டு வந்தது.
இந்த நூற்பாலைக்கு சொந்தமாக மொத்தம் 26.21 ஏக்கர் நிலம் உள்ளது. ஆலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க தமிழக அரசின் நிதியுதவியுடன் ஆலை ரூ.30 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தற்போது 20,160 கதிர்களுடன் ஆலை செயல்பட்டு வருகிறது. ஆலையில் 49 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 250 தினக்கூலி தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆலையில், விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் மற்றும் இலவச சீருடை வழங்கும் திட்டத்திற்குத் தேவையான 2/40 பாலி காட்டன், 40 நெம்பர் சிட்டா மற்றும் கோன் நூல், 2/40 நெம்பர் சிட்டா மற்றும் கோன் நூல், 2/30 நெம்பர் சிட்டா மற்றும் கோன் நூல், 60 நெம்பர் கோன் நூல் இரகங்களும், தேசிய கைத்தறி வளர்ச்சி கழகத்தின் மூலம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேவையான 20 நெம்பர், 26 நெம்பர், 2/17 நெம்பர் போன்ற நூல் இரகங்களும் உற்பத்தி செய்யப்பட்டு நூல் விலை குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆலையின் மொத்த உற்பத்தியில் 75 விழுக்காடு அளவிற்கு அரசு திட்டங்களுக்கும், 25 விழுக்காடு அளவிற்கு தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம் மூலமான விற்பனைக்கும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆலையின் ஒரு மாத உற்பத்திக்குத் தேவையான பஞ்சு 1300 பேல்கள் ஆகும். ஆலையின் மாதாந்திர சராசரி உற்பத்தி மற்றும் விற்பனை மதிப்பு முறையே ரூ.500 இலட்சம் மற்றும் ரூ.400 இலட்சம் ஆகும். இவ்வாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரு ஷிப்டிற்கு இரண்டு முறை தேநீர் மற்றும் இரவு ஷிப்டிற்கு சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது. ஆலையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கு இரண்டு ஜோடி சீருடை வழங்கப்பட்டு வருகிறது. பண்டிகை தினத்தை முன்னிட்டு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் மற்றும் காதி நிறுவனங்களள் மூலம் துணிக்கடன் அனுமதிக்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர்.
2-வது மற்றும் 3-வது ஷிப்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக இருபாலருக்கும் தனித்தனியே ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை தமிழக அரசால் 19.01.2022-ந் தேதியில் ஆலை தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி தொகை ரூ.4.16 கோடி அரசிடமிருந்து கடன் உதவி கிடைக்கப்பெற்று அனைத்து தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி வங்கி கணக்கில் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் ஓய்வு பெற்ற 109 தொழிலாளர்கள் மற்றும் 37 பணியாளர்கள் என மொத்தம் 146 நபர்களுக்கு மொத்தம் ரூ.5 கோடியே 47 இலட்சம் மதிப்பில் வழங்கப்படுகிறது என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
தொடர்ந்து, கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் நூற்பாலையில் ஓய்வு பெற்ற 109 தொழிலாளர்கள் மற்றும் 37 பணியாளர்கள் என மொத்தம் 146 நபர்களுக்கு மொத்தம் ரூ.5 கோடியே 47 இலட்சம் மதிப்பில் பணிக்கொடை தொகைக்கான காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன், மத்தூர் ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி, பேரூராட்சி தலைவர்கள் அமானுல்லா பர்கூர் சந்தோஷ்குமார் மாவட்ட அறங்காவல் குழு தலைவர் ரஜினிசெல்வம், ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமலைராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்ரமணி, பாலாஜி, இணை இயக்குநர் (துணிநூல்) சாரதி சுப்ராஜ், கூட்டுறவு நூற்பாலை மேலாளர் முருகேசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டுறவு நூற்பாலை செயலாட்சியர் அம்சவேணி நன்றி கூறினார்.