பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பொது சுகாதார துறை வட்டார மேற்பார்வையாளர் பால் ஆபிரகாம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கிறிஸ்டோபர் செல்வதாஸ், ஜெயபால், சுஜித், அகிலன் மற்றும் அருண் ஆகியோர் கொண்ட குழுவினரும், உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பாதுகாப்பு அலுவலர் செல்லப்பாண்டி, காவல் உதவி ஆய்வாளர், சுரேஷ்குமார், வட்டார கல்வி அலுவலர் ரோஸ்லின் ஆகியோர் கொண்ட குழுவினரும் சாத்தான்குளம் பகுதியில் நேற்று பொது இடங்களில் புகைப்பிடித்த 6 நபர்களுக்கு அபராதம் விதித்தனர்.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சாத்தான்குளம் கடை வீதி வியாபார நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் ரூ 25,000 அபராதம் விதிப்பதுடன் கடை சீல் வைக்கப்படும் என்றும் தொடர்ந்து புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தால் நிரந்தரமாக வியாபார நிறுவனம் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். அனுமதிக்கப்பட்ட கடைகளில் 18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என விளம்பரப் பதாகை வைக்க அறிவுறுத்தப்பட்டது, கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் வரை எந்த வித புகையிலை பொருட்கள் விற்பனை செய்யவோ புகைப்பிடிக்கவோ அனுமதி கிடையாது எனவும் எச்சரித்தனர்.