காத்திருப்பு போராட்டம்: பொதுமக்கள் தகவல்

காத்திருப்பு போராட்டம்: பொதுமக்கள் தகவல்

காத்திருப்பு போராட்டம்


திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் என்ற பெயரில் செய்யாறு சிப்காட் பகுதி 3 என்று சுமார் 3200 ஏக்கர் முப்போகம் விளையும் நிலத்தை தரிசு என்று பொய்யாக வகைப்படுத்தி நிலம் கையகப்படுத்த ஸ்டாலின் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முப்போகம் விளையும் விளை நிலத்தை பாழ்படுத்தும் மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த 02-07-2023 அன்று தொடங்கிய எங்களின் காத்திருப்பு போராட்டம் 100 நாட்களை கடந்து உறுதியுடன் நடத்தி வருகிறோம்.

எங்களின் அறவழி போராட்டத்தை கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியர் இன்று வரை போராட்ட பந்தல் பக்கமே தலை காட்டாமல் உள்ளார். செய்யாறு சட்ட மன்ற உறுப்பினர் ஒ.ஜோதி தனது சட்டமன்ற தொகுதியிலே நடக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாததை போல் இருந்து வருகிறார். திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு. அவர்கள் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையின் பக்கம் நில்லாமல் சிப்காட் திட்டத்தை நிறைவேற்றினால் பயனடையும் கார்ப்பரேட் முதலாளிகளின் பக்கம் நிற்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

விவசாயிகளுக்கான தனியாக பட்ஜெட்டை அறிவித்து தாங்கள் விவசாயிகளின் உற்ற தோழன் என்று அறிவித்துக் கொண்ட திமுக அரசின் அமைச்சரான எ.வ.வேலு அவர்களின் விவசாயிகள் மீதான அக்கறை இதுதானோ? உண்மையிலேயே திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி மற்றும் எ.வ. வேலு மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் இது விவசாயிகளின் அரசு என்று சொல்லிக் கொள்வது உண்மை என்றால் உடனடியாக விவசாயிகளின் நியாயமான போராட்டத்திற்கு மதிப்பளித்து மேல்மா சிப்காட் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்‌.

அதைவிடுத்து விவசாயிகளின் நியாயமான போராட்டத்தை அடக்கி ஒடுக்க நினைத்தால் அப்பட்டமாக இது விவசாயிகளின் விரோத அரசு என்று தங்களை தாங்களே நிரூபித்துக் கொள்வீர்கள். காவல்துறையை வைத்து மிரட்டி இதுவரை 11 பொய் வழக்குகள் பதிந்து இந்த போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டுள்ளது தி.மு.க அரசு. இது விவசாயிகள் விரோத செயல். மேல்மா சிப்காட் திட்டத்தை திரும்பப்பெறும் வரை ஒருபோதும் எங்கள் மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் ஓயாது.

தமிழக மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் 100 நாட்களைக் கடந்த நியாயமான போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும் உடனடியாக களமிறங்கி எங்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்! என மேல்மா-சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள்-இயக்கம் வெளிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Tags

Next Story