குடிநீர் விநியோகிக்ககோரி தஞ்சையில் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் விநியோகிக்ககோரி தஞ்சையில் பொதுமக்கள் சாலை மறியல்

சாலை மறியல் 

தஞ்சாவூரில் குடிநீர் வினியோகம் செய்யாததைக் கண்டித்து, காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாநகராட்சி 20ஆவது வார்டுக்கு உட்பட்ட சேவப்பநாயக்கன்வாரி மேல்கரை, வடகரை, கிரி ரோடு, ராஜாஜி ரோடு, பிரதாபசிம்மபுரம், ராஜன் ரோடு ஆகிய பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு மாநகராட்சி சார்பில் குழாய் மூலம் வீடுகளுக்கு தினமும் காலை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இது குறித்து 20-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணன் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார். ஆனால், குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதே போல், சனிக்கிழமை காலையும் குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன், மாமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் தலைமையில் சீனிவாசபுரம் கிரி ரோட்டில் காலிக் குடங்களுடன் திரண்டனர். பின்னர், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், மேற்கு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், எங்கள் பகுதியில் வீடுகளுக்கு ஊதா கலர் குழாய் பொருத்திய பிறகு குடிநீர் வினியோகம் சீராக இல்லை. சில நிமிடங்கள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது ஒரு வாரமாக சுத்தமாக தண்ணீர் வரவில்லை. எனவே, எங்கள் பகுதிகளுக்கு ஊதா கலர் குழாயை நீக்கிவிட்டு பழைய முறையில் குழாய் பொருத்த வேண்டும். தினமும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம்" என்றனர்.

இதற்கு மாநகராட்சி அதிகாரிகள், தற்போது லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்கிறோம். உடனே பிரச்சினையை சரி செய்து குடிநீர் வினியோகம் செய்து தருகிறோம் என்றனர். இதனை ஏற்றுக் கொண்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story