பூதலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

பூதலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சாலை மறியல்
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.டிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் உள்ள அக்ரஹார தெரு, நடுத்தெரு, சந்துத்தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாகவே முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து, அப்பகுதியினர் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காலி குடங்களுடன் சனிக்கிழமை காலை பூதலூர் – திருக்காட்டுபள்ளி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பூதலூர் காவல்துறையினர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் மறியலை கைவிடப் போவது இல்லை என போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து, பூதலூர் வட்டாட்சியர் மரிய ஜோசப் சம்பவ இடத்திற்கு வந்து, விரைவில் தண்ணீர் வர ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது, எங்கள் ஊரில் இருந்து வெண்ணாறு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தான். இருப்பினும் ஆற்றில் மணல் அள்ளியதால், நாணல் மண்டிக் கிடக்கிறது. எங்கள் பகுதியை சுற்றியுள்ள ஏரி, குளங்கள் எல்லாம் போதிய அளவில் பராமரிப்பு இல்லாமல் போனதாலும் தண்ணீர் இல்லை. இதனால், எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டு குடிநீர் பிரச்சனை என்பது பூதாகரமாக எழுந்துள்ளது. ஆற்றுக்கு அருகே எங்கள் ஊர் இருந்தாலும் தண்ணீர் உப்புத் தன்மையுடன் தான் உள்ளது. அதுவும் குறைந்த அளவில் தான் வருகிறது இவ்வாறு தெரிவித்தனர்.

Tags

Next Story