போலகம் வள்ளுவன் குளம் தூர்வாரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
குளம் தூர்வாருதல்
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், அகரக்கொந்தகை ஊராட்சி கள்ளிக்காட்டு போலகம் வள்ளுவர் தெருவில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அப்பகுதியில் வள்ளுவன் குளம் என்ற குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் குளத்தில் சுற்றுச்சுவர் மற்றும் படிக்கட்டுகள் இல்லாமல் குளத்திற்குள் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தவறி விழும் அபாய நிலை உள்ளது.இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும் குளத்தைச் சுற்றி கருவேல மரங்கள் படர்ந்து கிடக்கிறது.இதனால் குளத்து நீர் சுகாதாரமற்ற நிலைக்கு மாறி வருகிறது.இதனால் குளத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
நடவடிக்கை இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு வள்ளுவன் குளத்தை தூர்வாரி சுற்றுச்சுவர் மற்றும் படிக்கட்டுகள் அமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.