குடிநீர் வினியோகத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை
தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி ஒன்பத்து வேலியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருக்காட்டுப்பள்ளி அருகே ஒன்பது வேலி பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது. இப்பகுதியில் தான் 7 லட்சம் லிட்டர் குடிநீர் சேகரிப்பிற்கான ஊற்று கிணற்றின் சுற்றுப்பகுதி உள்ளது. இந்த பகுதி இப்போது கழிவுகள் தேங்கி சாக்கடையாக மாறி உள்ளது. இதிலிருந்து ஓடும் கழிவு நீர் அருகில் உள்ள ஆற்றில்தான் விழுகிறது. இதனால் ஆற்றில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
குடமுருட்டி ஆற்றில் இருந்து சுமார் 4 கிராமத்திற்கு விவசாயம் செய்ய தேவைப்படும் நீர் வாய்க்கால் வழியாக சென்று கொண்டிருந்தது. இப்போது இந்த வாய்க்காலும் சாக்கடையாக மாறி விட்டது. குப்பைகளையும் அப்பகுதியில் எரிப்பதால் மிகுந்த துர்நாற்றத்தும் ஏற்படுகிறது. இதனால் ஒன்பது வேலி பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை. இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு திருக்காட்டுப்பள்ளி வழியாக செல்லும் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சுத்தமான மற்றும் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். இப்பிரச்னைகள் குறித்து கடந்த 26 மாதங்களாக தொடர்ந்து முறையிட்டு வருகிறோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.