மனோரா கடற்கரையில் குவிந்த மக்கள்

சேதுபாவாசத்திரம் அருகே மனோரா கடற்கரையில் காணும் பொங்கலை கொண்டாட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர்.

போகிப் பண்டிகை, பொங்கல், மாட்டுப்பொங்கலை வீடுகளில் இருந்து வெளியில் செல்லாமல் கொண்டாடிய மக்கள் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு மனோரா கடற்கரையில் குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு வேலை பார்ப்பவர்கள், சொந்த தொழில் செய்பவர்கள் பொங்கலை பெற்றோர்களுடன் கொண்டாட சொந்த ஊருக்கு வருவது வழக்கம் . போகி, பொங்கல், மாட்டுப்பொங்கலை வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்து கொண்டாடிவிட்டு, மாட்டு கிடைகளில் இருந்து நேற்று காலை மாடுகளை அவிழ்த்து விட்டதும் அருகில் இருக்கும் சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள்.

சேதுபாவாசத்திரம் அருகே மனோரா கடற்கரையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு குழாம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் ஏராளமானவர்கள் குழந்தைகளுடன் வந்து மனோரா கோபுரத்தை ரசித்தும், சிறுவர் பூங்காவில் குழந்தைகளை விளையாட செய்தும், கடலில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மனோராவிலிருந்து 4 கி.மீ தூரத்தில் இயற்கையாக உருவான புதுப்பட்டினம் பீச்சுக்கும் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் வந்து அழகிய கடற்கரை மணலில் அமர்ந்து கடல் அலைகளை ரசித்தும், கடலில் குளித்தும் மகிழ்ந்தனர். சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து அதிக அளவு மக்கள் வந்ததால் சேதுபாவாசத்திரம் தொடங்கி அதிராம்பட்டினம் வரை கிழக்கு கடற்கரை சாலையில் எங்கு பார்த்தாலும் கார்களும், மோட்டார் சைக்கிள்களும் நிறுத்தப்பட்டிருந்தது.

Tags

Next Story