விவசாய ஓடையில் ரசாயன கழிவுநீரை கொட்டியதால் லாரியை சிறைபிடித்த மக்கள்
சிறைபிடிக்கப்பட்ட லாரி
மயிலம் அருகே நல்லாமூர் மற்றும் கள்ள கொளத்தூர் கிராமம் உள்ளது. இந்த 2 கிராமத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள விவசாய நீர் ஓடைகளில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் டேங்கர் லாரியில் ராசாயன கழிவுநீரை கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகி வருகிறது. மேலும் ராசாயன கழிவுநீர் கலந்த நீரை குடித்த சில ஆடு, மாடுகள் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ரசாயன கழிவு களை கொட்ட வந்த லாரியை சிறைபிடித்தனர். பின்னர், அந்த லாரியை மயிலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.