கர்நாடகா தர்மஸ்தலா கோவிலுக்கு பாகலூர், சூடாபுரம் மக்கள் தாராளம்
கர்நாடகா, தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலுக்கு பாகலூர் மற்றும் சூடாபுரம் ஆகிய கிராம மக்கள் 15 டன் அளவில் அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்களை நன்கொடையாக வழங்கினர்.
கர்நாடக மாநிலம் ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதா சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் லட்ச தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்யும் லட்ச தீப உற்சவ நிகழ்ச்சி நடைபெறும், அந்த வகையில் நாளை தர்மஸ்தலா கோயிலில் லட்ச தீப விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தர்மஸ்தலா கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் ஓசூர் அருகே உள்ள பாகலூர் மற்றும் சூடாபுரம் ஆகிய கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் தங்களது தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் அரிசி, மளிகை பொருட்கள் ஆகியவற்றை கோயிலுக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதேபோல இன்று பாகலூர் மற்றும் சூடாபுரம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் 15 டன் எடை அளவிலான அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவற்றை தர்மஸ்தலா கோயிலுக்கு லாரிகளில் அனுப்பி வைத்தனர். முன்னதாக அங்குள்ள கோயிலில் கிராம மக்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி உணவுப் பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் உணவுப்பொருட்களை தர்மஸ்தலா கோயிலுக்கு லாரிகளில் கொண்டு சென்றனர்.