சாலைகள் சீரமைக்காததால் தேர்தலை புறக்கணிப்பதாக ஊர் மக்கள் அறிவிப்பு
சாலையை சீரமைக்க கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பேரூராட்சி 13-வது வார்டுக்குட்பட்ட அரமன்னம் குரிவியோடு முதல் கல்லாம் பொற்றை செல்லும் சாலையானது மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. ரோட்டில் உள்ள ஜல்லிகள் பெயர்ந்து கரடு முரடாக காட்சி அளிக்கிறது.அந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்த வண்ணம் உள்ளனர்.
இந்த சாலையை செப்பனிட்டுதர கேட்டு சம்மந்தப்பட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு கோரிக்கை வைத்தனர்.இதுவரைக்கும் சாலை சரி செய்யப்படவில்லை. இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் அரசு அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் கண்டித்து அந்த பகுதி மக்கள் ஓட்டு போடாமல் தேர்தலை புறக்கணிப்போம் என்று அந்த பகுதியில் இன்று பதாதைகள் வைத்துள்ளனர்.
இதுபற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, தற்போது மத்திய அரசின் அம்ரூத் 2.0 குடிநீர் திட்டத்திற்காகர பேரூராட்சிக்குட்பட்ட பகுதி முழுவதும் பள்ளம் தோண்டப்பட்டு பைப் லைன் வேலை நடைபெறுகிறது. இதனால் இந்த பணிகள் முடிந்த பிறகு இந்த சாலை பணி செப்பனிடப்படும் என்று கூறினர்.