குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மாதம் ஒருமுறை மட்டுமே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு வழங்கும் குடிநீரும் சுத்தமாக இல்லை என்றும், கழிவு நீர் கலந்து கருப்பு நிறத்தில் மங்களாக வருவதாகவும், பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு துறைமங்கலம் பகுதியில் டிசம்பர் 7ம் தேதி காலை வழங்கப்பட்ட குடிநீர் கழிவுநீர் கலந்து கருப்பு நிறத்தில் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோல அடிக்கடி அசுத்தமான குடிநீர் வழங்கப்படுவதாக பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பெரம்பலூர் நகராட்சி 21 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பழனிச்சாமி தலைமையில், துறைமங்கலம் பங்களா பேருந்து நிறுத்தம் பகுதியில் திடீர் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கத் தொடங்கியது. சம்பவம் குறித்த தகவல் அறிந்த பெரம்பலூர் நகர போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மாதந்தோறும் இவ்வாறு குடிநீர் கழிவுநீர் கலந்து வருவதாகவும் முறையாக தண்ணீர் வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருவதாகவும், தங்களுக்கு குடிநீர் கொடுப்பதை முறைபடுத்த வேண்டும், சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு, உடனடியாக தற்பொழுது குடிநீர் வாகனங்கள் மூலம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி, மறியலை கைவிட மறுத்தனர். இதனால் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பெரம்பலூர் நகராட்சி 21 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பழனிச்சாமி உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்களை கலைந்து, போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் பெரம்பலூர் துறைமங்கலம் பகுதி திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags
Next Story