சேலம் மகாத்மா காந்தி மைதானத்தில் தெருநாய்கள் துரத்துவதால் மக்கள் அவதி

சேலம் மகாத்மா காந்தி மைதானத்தில் தெருநாய்கள் துரத்துவதால் மக்கள் அவதி


சேலம் மகாத்மா காந்தி மைதானத்தில் தெருநாய்கள் துரத்துவதால் நடைபயிற்சி செல்வோர் அச்சம் அடைவதாக புகார் எழுந்துள்ளது.


சேலம் மகாத்மா காந்தி மைதானத்தில் தெருநாய்கள் துரத்துவதால் நடைபயிற்சி செல்வோர் அச்சம் அடைவதாக புகார் எழுந்துள்ளது.

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் 8 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த மைதானத்திற்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் கால்பந்து, தடகளம், ஜிம்னாஸ்டிக், நீச்சல் ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

அதேபோன்று மத்திய அரசின் இந்திய விளையாட்டு ஆணைய அலுவலகம் ஆண்கள் விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. இதில் கூடைப்பந்து, தேக்வாண்டோ ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மாணவர்கள் பலர் தங்கி பள்ளியில் படித்துக்கொண்டே விளையாட்டு பயிற்சி எடுத்து வருகின்றனர். காலை, மாலை என 2 வேளைகளிலும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மைதானத்தில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. விளையாட்டு பயிற்சி செய்து கொண்டிருக்கும் வீரர், வீராங்கனைகளை அந்த நாய்கள் ஓட, ஓட விரட்டுகின்றன. தெருநாய்கள் துரத்தும் போது ஒரு சிலர் தவறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் தினந்தோறும் அரங்கேறி வருகிறது.

நாய்கள் தொல்லைக்கு பயந்து பயிற்சி எடுக்க செல்லலாமா? வேண்டாமா? என்ற மன நிலையும் சில நேரங்களில் ஏற்படுவதாக பயிற்சி பெற்று வரும் வீரர், வீராங்கனைகள் கூறுகின்றனர். காந்தி மைதானத்தை சுற்றி 400 மீட்டருக்கு நடைபயிற்சி மைதானம் அமைக்கப்பட்டு உள்ளன. நகரின் முக்கிய பகுதியில் இந்த மைதானம் அமைந்து உள்ளதால், தினமும் காலை, மாலையில் ஆயிரக்கணக்கானவர்கள் நடைபயிற்சி செல்கின்றனர். நடைபயிற்சி செய்பவர்களையும், நாய்கள் விட்டு வைக்கவில்லை.

அவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்க பாய்கின்றன. ஒரு சிலர் நாய்கள் கடித்ததில் காயம் அடைந்து சிகிச்சையும் பெற்று உள்ளனர். எனவே காந்தி மைதானத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயிற்சி பெற்று வரும் வீரர், வீராங்கனைகள், நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Tags

Next Story