சேலத்தில் கத்திரி வெயில் தாக்கத்தால் பொதுமக்கள் அவதி

சேலத்தில் கத்திரி வெயில் தாக்கத்தால் பொதுமக்கள் அவதி

குடைகளை பிடித்த படி செல்லும் வாகன ஓட்டிகள்

சேலத்தில் அக்னி வெயில் துவங்கி வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்திருப்பதால் வாகன ஓட்டிகள் குடைகளை பிடித்தபடி சென்றனர்.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். ஒருசிலர் வெயிலுக்கு பயந்து வெளியே செல்லமுடியாமல் தங்களது வீடுகளுக்குள்ளே முடங்கி விடுகின்றனர். மேலும், வேலை மற்றும் பல்வேறு தேவைகளுக்கு வெளியே செல்லும் பொதுமக்கள், சாலையோரம் ஆங்காங்கே உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் மோர், இளநீர், பழச்சாறு உள்ளிட்ட நீர் ஆகாரங்களை உட்கொண்டு வெயிலின் தாக்கத்தை குறைத்து கொள்கிறார்கள்.

இதனிடையே, அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. ஏற்கனவே வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் தற்போது கத்திரி வெயிலும் தொடங்கியதால் பொதுமக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பி வருகின்றனர். சேலத்தில் நேற்று காலை வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. அதன்பிறகு காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை வெப்பம் அதிகமாக காணப்பட்டது. சேலத்தில் நேற்று 104.9 டிகிரி வெயிலின் அளவு பதிவாகி இருந்தது. இதனால் வழக்கம்போல் வெளியே சென்றவர்கள் குடைகளை பிடித்தபடி சாலையில் நடந்து சென்றதை காணமுடிந்தது. மொபட்டில் சென்ற இளம்பெண்கள், தங்களது சுடிதார் துப்பட்டாவை கொண்டு முகத்தை மூடிக்கொண்டு சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story