குடிநீர் குழாய்களுக்கு இறுதி சடங்குகள் செய்த பொதுமக்கள்

குடிநீர் குழாய்களுக்கு இறுதி சடங்குகள் செய்த பொதுமக்கள்

கடையத்தில் குடிநீர் குழாய்களுக்கு பொதுமக்கள் இறுதி சடங்குகள் செய்தனர்.


கடையத்தில் குடிநீர் குழாய்களுக்கு பொதுமக்கள் இறுதி சடங்குகள் செய்தனர்.
தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கேரள மாநிலத்திற்கு தினந்தோறும் ஏராளமான கனரக லாரிகளில் கனிம வளங்கள் எடுத்துச்செல்லப்படுகிறது. அந்த லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கே அப்பகுதி மக்கள் நாள்தோறும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விதிகளை பின்பற்றாமல் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி சென்று வருகின்றனர். இதனை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் இதுவரை அதற்கு நிரந்தர தீர்வு என்பது இல்லாமல் இருந்து வருகிறது. இதற்கிடையே அதிக பாரம் ஏற்றி செல்லும் கனிமவள லாரிகளால் குடிதண்ணீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீர் சாலைகளில் வெளியேறி வீணாகி வருகிறது. கடுமையான கோடையால் மக்கள் தண்ணீரின்றி தவிக்கும் நிலையில் கனிம வள லாரிகளால் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதை கண்டித்தும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான பூமிநாத் தலைமையில் ஏராளமானோர் திரண்டு குடிநீர் குழாய் செத்துவிட்டது எனக் கூறி குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்குகள் செய்து எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு போராட்ட நிகழ்வில் சமூக ஆர்வலர் கஜேந்திரன், தெற்கு கடையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலிங்கம், சிவ எழிலரசன், சுப்புக்குட்டி உள்ளிட்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story