எதிர்காலத்தில் மாற்று சக்தியாக மக்கள் ஆதரிப்பர்
அ.ம.மு.க.,வை எதிர்காலத்தில் மாற்று சக்தியாக மக்கள் ஆதரிப்பர் என, டிடிவி தினகரன் கூறினார்.
மாற்று சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை வரும் காலங்களில் மக்கள் ஆதரிப்பார்கள் டிடிவி தினகரன் வேலூரில் பேட்டி. வேலூர்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட (அமமுக) அம்மா மக்கள் முன்னேற கழக பொறுப்பாளர்கள் மற்றும் செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கட்சி தொண்டர்கள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். டிடிவி.தினகரன் மேடையில் பேசுகையில், அதிமுக கட்சியை துரோகிகளிடம் இருந்து மீட்க வேண்டும், ஆட்சி அதிகாரம் இருந்ததால் ஏமாற்றி வந்தார்கள். இன்றைக்கு அது இல்லை காலம் நெருங்கி விட்டது. இந்த பாராளுமன்ற தேர்தல் அந்த துரோகிகளுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக அமையும். தமிழ்நாட்டு மக்களோடு சேர்ந்து அந்த துரோகிகளுக்கு சாவு மணி அடிக்க வேண்டும். தேர்தல் பணியை இப்போதே துவங்க வேண்டும் எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்ற தேர்தல் வரலாம் என பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், நானும் ஓபிஎஸ்-ம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே இணைந்து பணியாற்றுவோம் என முடிவெடுத்துள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒரு சில கட்சிகளுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
அதெல்லாம் நல்லபடியாக முடிந்த பிறகு கூட்டணிக் குறித்து சொல்வது தான் அரசியல் கட்சிக்கு அழகாக இருக்கும். கூட்டணி முடிவான பிறகு முறையாக உங்களுக்கு சொல்கிறேன். எடப்பாடி பழனிச்சாமி பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அம்மாவின் இயக்கத்தை கையகப்படுத்தி வைத்துள்ள அந்த சுயநலவாதிகள் மக்கள் மன்றத்திலே அவர்கள் தோல் உரிக்கப்படுகின்ற காலம் வெகு விரைவில் வரும். தமிழ்நாட்டு மக்கள் துரோகத்திற்கு என்றைக்கும் ஆதரவாக இருக்க மாட்டார்கள். துரோகம் செய்தவர்கள் அதற்கான பலனை அனுபவிக்கும் காலம் எதிர் காலத்தில் வரும். பாஜக வெளியிடுவதாக சொன்ன ஊழல் புகார் பட்டியலுக்காக நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம். ஆளுகின்ற கட்சி மக்கள் விரோத ஆட்சியை செய்து வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமியின் ஊழல் ஆட்சியினால் தான் மக்கள் இன்றைக்கு கோபப்பட்டு திமுகவிற்கு வாக்களித்தார்கள். விடியல் வரும் என நினைத்து ஆட்சியை கொடுத்தார்கள் ஆனால் இன்றைக்கு திமுக விடியாத ஆட்சியை தந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை கூட அவர்கள் நிறைவேற்ற மனம் இல்லாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு எல்லாம் மாற்று சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை வரும் காலத்தில் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என டிடிவி தினகரன் கூறினார்.