ஆட்சியரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

போராட்டம்
மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் இடம் பெற்றுள்ள குடும்ப அட்டையை என்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள AAY வகை குடும்ப அட்டையாக மாற்ற வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகைக்கு ஜூன் முதல் விண்ணப்பித்துகாத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர மாவட்ட அலுவலரை நியமிக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு நிபந்தனையற்ற கடன் உதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 31ம் தேதி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 6:00 மணி வரை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அன்றையதினம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போது பிப்ரவரி 14-ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அன்றைய போராட்டம் முடிவுக்கு வந்தது இந்நிலையில் நேற்று காலை 12 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தைக்காக மாற்றுத்திறனாளிகள் வருகை தர தொடங்கினர். இதனையடுத்து மதியம் 1 மணியை கடந்தும் மாவட்ட ஆட்சியர் வருகை தராத நிலையில பேச்சுவார்த்தைக்கு மாற்றுத்திறனாளிகளை அழைக்காமல் தங்களை மாவட்ட ஆட்சியர் அவமதித்து காக்க வைப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
அப்போது மாவட்ட ஆட்சியருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியதோடு மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மீண்டும் 2 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான பேச்சுவார்த்தைக்கு மாற்றுத்திறனாளிகள் சென்றனர். இதனையடுத்து கூட்டத்தில் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர்.
இந்த போராட்டம் குறித்து பேசிய மாற்றுத்திறனாளிகள், தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவித்த நிலையிலும் மதுரை மாவட்டத்தில் மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான எந்த கோரிக்கை மனுக்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதே இல்லை எனவும் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகள் தினத்தை புறக்கணித்தார், மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டபோது பேச்சுவார்த்தைக்கு வர மறுத்தார், தற்போது பேச்சுவார்த்தைக்கு குறிப்பிட்ட நேரத்தில் வராமல் மாற்றுத்திறனாளிகளை காத்திருக்கவைத்து அலைக்கழிக்கிறார் எனவும் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் செயல்பட்டு வருகிறார் எனவும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வு செய்யப்பட்ட பட்டியலை கூட அதிகாரிகள் தொலைத்து விட்டதாக கூறுகின்றனர் எனவும் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் இல்லையெனில் தங்களது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்
