மகளிர் உரிமை தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு சார்பில் தகுதியுள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினர் உள்ள தகுதி வாய்ந்த பெண்களுக்கும் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்ப தலைவிகளுக்கு தமிழக அரசு சார்பில் 1000 ரூபாய் உரிமை தொகை முறையாக வழங்கப்படவில்லை என இன்று நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச பெட்ரோல் மூன்று சக்கர வாகனத்தை காரணம் காட்டி தமிழக அரசு உரிமைத் தொகை வழங்க மறுப்பதாகவும் எனவே மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு உடனடியாக உரிமைத் தொகை வழங்க வேண்டும் எனக்கூறி கண்டன கோஷங்களை எழுப்பி 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.