நியாவிலைக்கடை சரிவர திறக்கப்படுவதில்லை என மக்கள் தர்ணா போராட்டம் !!
போராட்டம்
மாவத்தூர் பகுதிநேர நியாவிலைக்கடை சரிவர திறக்கப்படுவதில்லை என 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நியாய விலை கடை முன்பு தர்ணா போராட்டம். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த தாதாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மாவத்தூர் கூட்டுரோடு பகுதியில் பகுதிநேர நியாயவிலைக்கடை இயங்கி வருகிறது.
வாரந்தோரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் திறக்கப்படும் இக்கடைக்கு கீழ்சங்கம்பட்டி, மேல் சங்கம்பட்டி, கோள்ளப்பட்டி, மாவத்தூர், அப்பாவுநகர், ஓன்டிமாவத்தூர், வெள்ளையகவுண்டர் நகர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 350ற்கும் மேற்பட்ட அட்டைதாரர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக இக்கடை சரிவர திறக்கப்படுவதில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு திறக்கப்பட வேண்டிய நியாய விலைக்கடை 12 மணியாகியும் திறக்கப்படாததால் ஆத்திரம் கொண்ட 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் நியாய விலை கடை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விபரமரிந்து வந்த கடையின் ஊழியர் சுகுணா கடையை திறக்க முயன்ற போது அவரை தடுத்து அதிகாரிகள் வரும் வரை கடை திறக்க கூடாது என முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஒரு மணி நேரம் கழித்து வந்த வட்ட வழங்கல் அலுவலர் லதா பொது மக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி, இனி வரும் காலங்களில் சரியான நேரத்திற்கு கடை திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த்தையடுத்து கடை திறக்கப்பட்டது. பொது மக்கள் வரிசையில் நின்று பொருகளை வாங்கி சென்றனர்.