விருதுநகரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.

மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அறிவுறுத்தினார்கள். முன்னதாக, விருதுநகர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளிகளில் பயிலும், விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளின் எதிர்கால கல்வி மேம்பாட்டிற்காக தமிழக அரசால் வழங்கப்படும் தலா ரூ.75,000/- வீதம் 31 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.23.25 இலட்சம் மதிப்பிலான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இத்தொகை வைப்பு நிதியாக வழங்கப்பட்டு 21 வயதை மாணவர்கள் அடையும் போது, வட்டியுடன் வழங்கப்படும். மேலும், தாட்கோ மூலம் 1 பயனாளிக்கு ரூ.4 இலட்சம் மதிப்பிலான மானிய விலையிலான ஆட்டோவினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,600/- மதிப்பிலான காதொலி கருவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.

Tags

Next Story