மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
சேலம் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் சந்தீப் சிங் நேகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நிதி ஆப்கே நிகட் 2.0, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீடுக் கழகம் இணைந்து மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந் தேதி கீழ்காணும் வளாகங்களில் நடைபெற உள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்திற்காக கூட்டம் அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள ஸ்ரீ சுவாமி சர்வதேச பள்ளியிலும், ஈரோடு மாவட்டத்துக்கு பெருந்துறையில் உள்ள ஆர்.டி. ஓட்டலிலும், தர்மபுரி மாவட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே உள்ள ஸ்ரீ ரங்கா டிபார்ட்மென்டல் ஸ்டோர்சிலும் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்துக்கான கூட்டம் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நாமக்கல் கிளை கூட்ட அரங்கிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஓசூர் தொழில் சங்கம் கூட்ட அரங்கத்திலும் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் உறுப்பினர் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இ.பி.எப். அட்வான்ஸ்கள் குறித்த விழிப்புணர்வு நடைபெறுகிறது. மேலும் முதல் பாதி கூட்டம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 2-ம் பாதி கூட்டம் மதியம் 2 மணி முதல் மாலை 5.45 மணி வரையும் நடைபெறும். இதில் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் வரம்பிற்குட்பட்ட பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், முதலாளிகள், முதன்மை முதலாளிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.