கே.எட்டிப்பட்டியில் ஆட்சியர் தலைமையில் மக்கள் திட்ட முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், கே.எட்டிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 103 பயனாளிகளுக்கு ரூ.20 இலட்சத்து 12 ஆயிரத்து 628 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், கே.எட்டிப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், இன்று நடைபெற்றது. மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சுகாதாரத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, உள்ளிட்ட துறைகள் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவது குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு நேரடியாக எடுத்துரைத்தனர்.
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறி அத்திட்டங்கள் மூலம் பொதுமக்கள் எவ்வாறு பயனடைய முடியும் என்பதை நேரடியாக துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளிக்கும் வகையில் இம்மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாதந்தோறும் நடத்தப்படுகிறது.
இன்று நடைபெற்ற இம் முகாமில் 266 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அவற்றை தீர்த்து வைப்பதற்காக இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்காக, நமது மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், வரும் 18-ம் தேதி முதல் 43 இடங்களில் பொதுமக்களிடமிருந்து குறை தீர்க்கும் மனுக்கள் பெறப்பட உள்ளது. மாவட்ட துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொள்ள உங்கள் ஊரிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர தொலைதூரம் உள்ள நிலையில், அனைத்து துறை அலுவலர்களும் உங்கள் பகுதியில் உள்ள மக்களை நேரடியாக சந்தித்து, தமிழக அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து தங்களது குறைகளை நிவர்த்தி செய்யப்படும். வரும் பாராளுமன்ற தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். இத்தேர்தல் மூலம் தங்களுக்கு விருப்பமான தலைவர்களை தேர்ந்தெடுக்கலாம். வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சரிபார்த்து கொள்ள வேண்டும். பெயர் விடுபட்டிருந்தால் விண்ணப்பம் அளித்து தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, நீக்கம் செய்ய விரும்பும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்தே https://voters.cci.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்கள் பெறலாம். மேலும், மக்கள் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அரசு அலுவலர்களுடன் தாங்களும் ஒன்றிணைந்து சுற்றுபுறத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், அரசு புறம்போக்கு நிலம், வாய்க்கால் புறம்போக்கு ஆகிய இடங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை. மழைக்காலங்களில் தங்களது சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல பிளாஸ்டிக், தேங்காய் தொட்டி, உரல், பழைய டயர் ஆகிய பொருட்களில் தண்ணீர் தேங்கி நிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது. இவற்றை தடுக்க தங்களது முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வழங்கப்படுகிறதா என்பதையும், தங்களது குழந்தைகள் சரியான உயரம், எடையுடன் இருக்கிறார்களா என்பதை அங்கன்வாடிக்கு சென்று அறிந்துகொள்ள வேண்டும். அதேபோல 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், காலை உணவு வழங்கப்படுவதை பெற்றோர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். உடல் ஊனமுற்ற குழந்தைகளை தனியாக ஒதுக்கி வைக்காமல், அவர்களையும் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.மேலும், 18 வயதிற்கு முன்பாக பெண்குழந்தைகளுக்கு திருமணம் செய்வதை முற்றிலும் தடுக்க வேண்டும். நமது மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை திருமணம் செய்வோர் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து அவர்களை படிக்க வைக்க வேண்டும். பெண்குழந்தைகளின் படிப்பிற்காக இலவச பாடபுத்தகம், பள்ளி சீருடை, இலவச சைக்கிள், இலவச தங்கும் விடுதி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. மேலும், பெண்கள் உயர்கல்வி பயில புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறது. இதுபோன்ற உதவித்தொகை மூலம் தங்களது பெண்குழந்தைகளை படிக்க வைத்து அவர்களின் படிப்பிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு தனியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல், அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அதேப்போல கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஸ்கேன் செய்து சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சரியான முறையில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே, பொதுமக்கள் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். தொடர்ந்து, மக்கள் தொடர்பு திட்ட முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், வருவாய் துறை சார்பாக, 32 பயனாளிகளுக்கு ரூ.9 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டு மனைப்பட்டாக்களும், சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பாக 30 பயனாளிகளுக்கு ரூ.6 இலட்சத்து 28 ஆயிரத்து 500 மதிப்பில் தற்காலிக இயலாமை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இயற்கை உதவித்தொகைகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பாக, 5 பயனாளிகளுக்கு ரூ.29 ஆயிரத்து 500 மதிப்பில் இலவச தையல் இயந்திரமும், தோட்டக்கலைத்துறை சார்பாக, 4 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 42 ஆயிரத்து 840 மதிப்பில் மா அடர் நடவு, தக்காளி பரப்பு விரிவாக்கம், விசை தெளிப்பான், சிப்பம் கட்டும் அறை ஆகியவற்றிற்கு மானியத்தொகையும், வேளாண்மைத்துறை சார்பாக, 22 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 36 ஆயிரத்து 788 மதிப்பில் வேளாண் இடுபொருட்கள், வேளாண் கருவிகளும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக, 10 பயனாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பில் தாது உப்பக் கலவை என மொத்தம் 103 பயனாளிகளுக்கு ரூ.20 இலட்சத்து 12 ஆயிரத்து 628 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகிய துறைகள் மூலம் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் திரு.பாபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.சி.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.பச்சையப்பன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.ஜெயந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.விஜயலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திருமதி.பத்மலதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.ரமேஷ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) திரு.சுந்தராஜன், கூட்டுறவு சார் பதிவாளர் திரு.சிவலிங்கம், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் மரு.மரியசுந்தரம், ஒன்றிய குழு தலைவர் திருமதி.பி.விஜயலட்சுமி பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.சசிகலா பெருமாள், ஊத்தங்கரை வட்டாட்சியர் திரு.திருமலைராஜன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். .