அரக்கோணம் அருகே அரசு பேருந்தைச் சிறை பிடித்துப் பொதுமக்கள் போராட்டம்
பேருந்தை சிறைபிடித்து போராட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து வளர்புரம் வழியாக கிருஷ்ணாபுரம் வரை அதிகாலை 5 மணிக்கு தடம் எண் டி -2 என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்தில் தன கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், கட்டிட வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் எல்லோரும் அரக்கோணம் வருவதற்கு இந்த அரசு பேருந்து பெரும் உதவியாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த டவுன் பேருந்து முள்வாய் கிராமத்திலையே திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் காலை 6.30 மணிக்கு வளர்புரத்துக்கு வரவேண்டிய அரசு டவுன் பேருந்து காலை 9 மணிக்கு வருவதால் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயனில்லாமல் உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித பயனும் இல்லாமல் போனதால் ஆத்திரம் அடைந்து வளர்புரம் மற்றும் தணிகைபோளூரை சேர்ந்த கிராம மக்கள் தணிகை போளூர் பஸ் நிறுத்தம் அருகில் அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அரக்கோணம் தாலுகா போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் அங்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இனிமேல் குறித்த நேரத்துக்கு பேருந்து இயக்கப்படும் என்று பேச்சுவார்த்தை மூலம் மறியலை கலைத்தனர் . இதை தொடர்ந்து பஸ் அங்கிருந்து 30 நிமிட காலதாமதத்தில் புறப்பட்டு சென்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..