போராட்டத்தில் ஈடுபட முயன்ற மக்கள் - சமாதானம் செய்த அதிகாரிகள்
காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சுமார் 2000க்கும் மேற்பட்ட வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்டப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஐந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் அளித்து வந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து குடியிருப்பு வாசிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வாரிய அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலி குடிநீர் குடங்களுடன் முற்றுகை இடுவதாக ஆலோசித்து வந்தனர். ஆனால் முற்றுகையை தவிர்க்க காவல்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் அப்பகுதியில் சாலை மறியல் நடத்த திட்டமிட்டனர்.
இத்தகவல் அறிந்த வாரிய அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் உள்ளிட்டோர் அப்பகுதிக்கு விரைந்து வந்து அப்பகுதி மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி தற்போது ஆறுகளை புனரமைக்கும் பணிகளை தொடங்கியதால் சாலை மறியல் கைவிடப்பட்டு அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சமாதானம் அடைந்தனர். புதிய ஆழ்துளை கிணறு மற்றும் ஊராட்சி ஒன்றியம் சார்பில் குடியிருப்பு அருகில் செல்லும் குடிநீர் குழாய்களுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.