ஆந்திரா விபத்தில் பேராவூரணி லாரி டிரைவர் பலி
ஆந்திராவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த, பேராவூரணியைச் சேர்ந்த லாரி ஓட்டுனரின் உடலை, பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவர உதவினார்.
அவருக்கு குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மருங்கப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 49), இவர் ஆந்திராவில் ரெடி மிக்ஸ் சிமெண்ட் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமை அன்று காலை ஆந்திர மாநிலம், நெல்லூரில் தான் வேலை செய்து கொண்டிருந்த லாரியில் இருந்து தவறி கீழே விழுந்து, தலையில் பலத்த காயம் அடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார். இவருக்கு மனைவி சத்யா, நடக்கவே முடியாத படுத்த படுக்கையாக கிடக்கும் சபரி (24) என்ற மாற்றுத்திறனாளி மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். ஒரு மகளுக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது.
ஏழ்மை நிலையில் உள்ள இவர் மருங்கப்பள்ளம் கிராமத்தில குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது சடலம் உடற்கூறாய்வுக்குப் பிறகு, சொந்த ஊருக்கு கொண்டு வர ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்த முடியாத நிலை இருந்தது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார், சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தொடர் நடவடிக்கையாக தமிழக அரசின் சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் பழனியப்பன் சடலம், ஆந்திர மாநில எல்லையில் இருந்து சொந்த ஊரான மருங்கப்பள்ளம் வரை எவ்வித செலவும் இன்றி ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு, திங்கள்கிழமை காலை பழனியப்பனின் இறுதிச்சடங்கு சொந்த ஊரில் நடைபெற்றது.
இதையடுத்து, பழனியப்பன் வீட்டிற்கு சென்ற எம்எல்ஏ நா.அசோக்குமார் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தாங்கள் கட்டணம் செலுத்தி ஆம்புலன்ஸ் மூலம் சடலத்தை கொண்டு வர முடியாத நிலையில், அரசின் சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி, சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவிய எம்எல்ஏ நா.அசோக்குமாருக்கும், சுகாதாரத் துறை அமைச்சருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பழனியப்பன் மனைவி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.