ஆசிரியர், அரசு ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்

பழைய ஓய்வூதியத்‌ திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தி போராட்டம்

பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் சங்க வட்டார தலைவர் பாலச்சந்தர் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் ராகவன்துரை போராட்ட கோரிக்கை விளக்கி பேசினார். போராட்டத்தில், ”தமிழக அரசு தனது தேர்தல்‌ அறிக்கையில்‌ கொடுத்த வாக்குறுதியின்படி காலம்‌ தாழ்த்தாமல்‌ பங்களிப்பு ஓய்வூதியத்‌ திட்டத்தினை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்‌ திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டும்.

தமிழக அரசு, நிதி பற்றாக்குறையினால்‌ நிறுத்தி வைக்கப்பட்ட சரண்‌ விடுப்பு சலுகையினை மீண்டும் வழங்கிட வேண்டும். தமிழக அரசு, அரசு அலுவலர்களுக்கு வழங்கிய 7வது ஊதிய குழு நிர்ணயத்தில்‌ 21 மாத நிலுவைத்‌ தொகையினை வழங்காமல்‌ நிலுவையாகவே உள்ளதால்‌, நிலுவைத்தொகையினை வழங்கிட வேண்டும்” என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் குழந்தைசாமி, மேனாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நீலகண்டன், வட்டார பொருளாளர் திருஞானவேல், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story