பிர்காவில் வண்டல் மண் எடுக்க அனுமதி : விவசாயிகள் கோரிக்கை!

பிர்காவில் வண்டல் மண் எடுக்க அனுமதி : விவசாயிகள் கோரிக்கை!

வண்டல் மண்

வண்டல் மண் எடுக்க இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள கிராமங்களை சேர்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ஹெக்டேர் மானாவாரி நிலங்கள் உள்ளன. இவையனைத்தும் வானம் பார்த்த பூமியாகும். ஆண்டுக்கொருமுறை மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது.

இந்நிலங்கள் பெரும்பாலும் கரிசல் மண் வகையை சேர்ந்ததாகும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடையில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளின் சானங்களை குப்பை மேட்டில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் எடுத்து சென்று நிலங்களில் இட்டு உழவு செய்வார்கள்.

காலப்போக்கில் கால்நடைகள் வளர்ப்பு குறைந்து விட்டதால் இயற்கை உரம், சத்து மண்ணில் குறைந்து விட்டது. செயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

தவிர கிராமப்புறங்களில் உள்ள குளம், குட்டை, ஊரணிகளில் வண்டல் மண் எனப்படும் கரம்பை மண் வெட்டி எடுத்து சென்று நிலங்களில் உரமாக பயன்படுத்தினர். இதனால் பயிர்களுக்கு நன்மை தரக்கூடிய மண்புழு அதிக அளவில் இனப்பெருக்கம் ஏற்பட்டு சுகாதாரமான,நச்சுத்தன்மையற்ற உணவு தானியங்கள் கிடைத்தது.

கடந்த பல ஆண்டுகளாக கனிம வளத்துறை நீர் நிலைகளில் கோடையில் வண்டல் மண் எடுக்க பல்வேறு கெடுபிடிகளை விதித்ததால் மண் எடுக்க முடியவில்லை. இதனால் நீர்நிலைகள் மண்மேடாகி மழைக்காலங்களில் தண்ணீர் சேமிக்க முடியாமல் போய்விட்டது.

இந்நிலையில் தமிழக அரசு இந்தாண்டு நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 875 ஊரணிகளில் மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. தற்போது விவசாயிகள் மண் எடுக்க அனுமதி கோரி ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பட்டியலில் சில கிராமங்கள் விடுபட்டு உள்ளது. தவிர கோவில்பட்டி வட்டம் இளையரசனேந்தல் குறுவட்டத்தை சேர்ந்த பன்னிரெண்டு வருவாய் கிராமங்கள் முழுவதுமாக வண்டல் மண் எடுக்கும் பட்டியலில் ஊரக வளர்ச்சி துறை ஊரணிகள், சிறு பாசன குளங்கள் விடுபட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தின் விவசாயத்தின் முக்கிய பகுதியாகவும், அதிக விளைச்சலை எடுக்கக்கூடிய கேந்திரபகுதியாகவும் இளையரசனேந்தல் பிர்கா உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இளையரசனேந்தல் பிர்காவிற்கு வண்டல் மண் எடுப்பதற்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story