மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்த பெருமாள்
மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்த பெருமாள்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி கோவில்களில் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலும் ஒன்றாகும். இது நவதிருப்பதிகளில் ஒன்பதாவது தலமாகும். இங்கு ஆண்டுதோறும் நான்கு திருவிழாக்கள் பிரசித்தி பெற்றவை. மேலும் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், நித்தியல், கோஷ்டி நடந்தது. பின்னர் மாலை 4 மணியளவில் சுவாமி பொலிந்து நின்றபிரான் தோளுக்கினியானில் எழுந்தருளி மாடவீதி வழியாக திருகுருங்குடி மடத்திற்கு சென்றார். அங்கு திருமஞ்சனம் நடந்தது.
அன்று இரவு பொலிந்துநின்ற பிரான் சுவாமி தாமிரபரணி ஆற்றில் உள்ள பந்தலில் இறங்கி அலங்கரிக்கப்பட்டு, சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சப்தாவரணம் சப்பரத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்து தவளையாக சாபம் பெற்றிருந்த மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. சாத்துமுறை கோஷ்டிக்கு பின் மீண்டும் தோளுக்கினியானில் எழுந்தருளி மாட வீதி வழியாக கோவிலை சென்றடைந்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.